போர்டோரிகோ – அமெரிக்க காலனியின் நூற்றாண்டுகால வரலாறு – முற்றும்
போர்டோரிகோ அரசியல் (கட்சிகளின்) வரலாறு:
70
களில் போர்ட்டோரிகோவில் FALN என்றொரு மார்க்சிய-லெனினிய இயக்கம் உருவானது.
போர்ட்டோரிக்கோவில் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதை ஒருபுறமும்,
அமெரிக்காவிற்கே சென்று பொதுமக்கள் அதிகம் கூடாத அரசு அலுவலகங்களையும்
இராணுவத்துறை கட்டிடங்களையும் தாக்குவதை மறுபுறமும் செய்யத்துவங்கியது
அவ்வமைப்பு. அமெரிக்க உழைக்கும் வர்க்கம் தங்களுடைய எதிரிகள் இல்லை
என்றும், அவர்களுக்க் தங்களது பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்கான கவன
ஈர்ப்பாவே இத்தாக்குதல்களை நடத்துவதாக அறிவித்தார்கள். ஆயுதந்தாங்கிய
போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தபோதே, தொழிலாளர் மற்றும் போராட்டங்களை
ஆதரிப்பது, இன்னபிற விடுதலை இயக்கங்களோடு இணைந்து செயல்படுவது, என
தொடர்ந்து மக்களோடும் தொடர்பில் இருந்தமையால், FALN இயக்கம் வளர்ந்துகொண்டே
இருந்தது. அதனால், FALN இயக்கத்தினரை மிகவும் ஆபத்தானவர்களாக அறிவித்து,
தேடுதல் வேட்டையினை நடத்தியது அமெரிக்க எப்.பி.ஐ. அமெரிக்காவில் வாழ்ந்த
போர்டோரிகோ மக்களின் உடைமைகளுக்கும் சொத்துக்களுக்கும், இயன்றளவு சேதங்களை
விளைவித்தது எப்.பி.ஐ. 80களின் துவக்கத்தில் FALN முக்கியமான போராளிகள்
பலரையும் கைது செய்தது அமெரிக்கா. அவர்கள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு
சம்பவங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததாலும், அக்குண்டுவெடிப்பு சம்பவங்களால்
யாருமே உயிரிழக்காத காரணத்தாலும், அவர்கள் யாருக்கும் மிகப்பெரிய தண்டனைகள்
வழங்கமுடியாது என்பதை உணர்ந்திருந்தது அமெரிக்க அரசு. அதனால், அவர்கள்
நாட்டின் இறையாண்மையை கெடுத்து, அமெரிக்க அரசைக்கவிழ்க்கக் கூடும் என்கிற
யூகத்தையே குற்றமாக முன்வைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 100 ஆண்டுகள் வரை
சிறை தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். FALN இயக்கத்தின் தலைவரான
பிளிபர்டோ தலைமறைவு வாழ்க்கை வாழத்துவங்கினார். 2005 ஆம் ஆண்டு அவர்
தங்கியிருந்த வீட்டைச்சுற்றி வளைத்து, கொடூரமான முறையில் அவரைக்கொன்றது
அமெரிக்க எப்.பி.ஐ. இது ஒரு “சட்டவிரோத, முறையற்ற கொலை” என்றே இதனை
விசாரித்த போர்டோரிகோவின் பொதுநலவாய ஆணையம் அறிவித்தது. ஆனால்,
எப்.பி.ஐ.யின் இயக்குனரோ, “எப்.பி.ஐ.யின் சட்டப்படி நாங்கள் செய்தது
சரிதான்” என்று அறிவித்தார்.
ஸ்பெயினின்
ஆதிக்கத்தின் கீழ் போர்டோரிகோ இருந்தபோது அந்நாட்டின் பூர்வகுடி
நிலவுடமையாளர்கள் ஸ்பெயினோடு ஒப்பந்தம் போட்டு தங்களது வியாபாரத்தை நடத்தி
வந்தனர். ஆனால் அமெரிக்கா, போர்டோரிகோவை ஆக்கிரமித்துக் கொண்ட பின்னர்
அமெரிக்கப் பெருமுதலாளிகளோடு போட்டிபோட முடியாமல் பூர்வகுடி
நிலவுடமையாளர்கள் தவித்தனர். தங்களது வியாபாரங்களைத் தொடர்ந்து நடத்த
முடியாமல் போனது. அதன் தொடர்ச்சியாக, 1904 ஆம் ஆண்டு அவர்கள் ஒன்றிணைந்து யூனியன் கட்சி என்று ஒன்றை உருவாகினார்கள். அதன் ஒரு கோரிக்கையாக போர்டோரிகோவின் விடுதலையும் இருந்தது. ஆனால் ஏற்கனவே நிலமில்லாமல் இருந்த போர்டோரிகோ மக்கள், அமெரிக்கப் பெருமுதலாளிகளின் புதிய நிறுவனங்களில் வேலை பார்க்கத் தொடங்கினர். அதனால் புதிய உழைக்கும் வர்க்கம்
ஒன்று அங்கு உருவாயிற்று. ஆகவே அமெரிக்கப் பெருமுதலாளிகளால் உருவான
உழைக்கும் வர்க்கம் ஒரு புறமும் போர்டோரிகோவின் பூர்வக்குடி
நிலவுடமையாளர்கள் மறுபுறமும் அமெரிக்க ஆட்சியாளர்கள் மற்றொரு புறமும்
முப்பரிமான வர்க்கப் போராட்டமாக உருவெடுத்தது. அக்காலகட்டத்தில்
போர்டோரிகோவின் குடியரசுக் கட்சி எப்படியாவது போர்டோரிகோவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என முடிவு செய்தது.
பன்னெடுங்காலமாக
போர்டோரிகோவின் பூர்வக்குடி நில உடைமையாளர்களின் கீழ் வேலை பார்த்து வந்த
போர்டோரிகோ உழைக்கும் வர்க்க மக்கள் அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளில் வேலை
கிடைத்தவுடன் அங்கே அவர்களுக்குக் கிடைத்த ஒரு சில சலுகைகள்
மிகப்பெரியதாகத் தோன்றின. போர்டோரிகோவின் பூர்வக்குடி நிலவுடமையாளர்களுடன்
கைகோர்க்க முன்வரவில்லை. அமெரிக்க சர்க்கரை ஆலைகளில் வேலை பார்த்தவர்கள்
தங்களின் ஆலை முதலாளிகளை எதிர்த்துமட்டுமே குரல் எழுப்பினர்.
1910 இல் உருவான சோசலிச கட்சி,
தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பூர்வக்குடி
நிலவுடமையாளர்கள் ஒருபுறமும் ஆலைத் தொழிலாளர்கள் ஒருபுறமும்
தேசியக்கொரிக்கை ஒருபுறமும் வேறுவேறு கோரிக்கைகளுடன் போராடியதால் இவர்கள்
அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியினை சோசலிசக் கட்சியால் செய்ய
முடியாமற்போயிற்று. சோசலிசக் கட்சியிலில் இருந்து வெளியேறியவர்கள்,
போர்டோரிகோவின் விடுதலையை ஆதரித்த யூனியன் கட்சியின் உறுப்பினர்கள்,
மற்றும் இன்னபிற விடுதலை இயக்கங்கள் போன்றவை இணைந்து போர்டோரிகோ தேசியக்கட்சியினை உருவாக்கினர். அதனைத் தலைமையேற்று நடத்திய அல்பிசு கேம்பஸ்
ஆயுதம் தாங்கி போராடும் அளவிற்கு அமெரிக்க எதிர்ப்புடன் விளங்கினார். 1934
ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய சர்க்கரை தொழிலாளர் போராட்டதிற்கு
அல்பிசுகேம்பஸ் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்தார். அக்கட்சியினர் ஊர் ஊராகச்
சென்று மக்களை ஒன்றுதிரட்டிப் போராடியும், அமெரிக்க இராணுவத்தின்
அடக்குமுறையால் அப்போராட்டம் வெற்றியடையவில்லை. அதே காலக்கட்டத்தில் 1934
ஆம் ஆண்டு போர்டோரிகோ கம்யூனிஸ்ட் கட்சி
உதயமானது. அச்சமயம் போர்டோரிகோவில் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம்
பெரியளவில் நடந்து கொண்டிருந்தது. அப்போராட்டத்தைப் பின்னிருந்து
வழிநடத்தியது கம்யூனிஸ்ட் கட்சிதான். அமெரிக்காவிலிருக்கும்
தொழிற்சங்கங்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்தன. இப்போராட்டம் போர்டோரிகோவின்
வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி அடைந்த போராட்டமாக இன்றளவும்
கருதப்படுகிறது. அப்போராட்டத்தி ன் முடிவில் போர்டோரிகோவில் பொதுத் தொழிலாளர்கள் சங்கமும் உருவாயிற்று இதன் மூலம் போர்டோரிகோவின் கம்யூனிஸ்ட் கட்சி ஓரளவிற்கு வளர்ந்துவந்த சூழ்நிலையில், 1940 இல் போர்டோரிகோவில் பாப்புலர் கட்சி என்றொரு புதிய கட்சி உருவானது.
போர்டோரிகோ
தேசியக் கட்சியின் போராட்டங்கள் அமெரிக்க இராணுவத்தால் அடக்கி
ஒடுக்கப்பட்டு, அதன் தலைவர் அல்பிசுகேம்பஸ் கைதாகி சிறைக்குச் சென்ற
சமயத்தில் உருவானது தான் பாப்புலர் கட்சி.
இக்கட்சி அதற்கு முன்னிருந்த மற்ற விடுதலை இயக்கங்கள் போல் அல்லாமல்
‘அமெரிக்க வல்லரசுடன் இணைந்து போர்டோரிகோவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு
செல்ல முடியும்’ என்ற புதிய கோரிக்கையை மக்கள் முன்வைத்தது . அதற்கு
கைமாறாக அமெரிக்க பெருநிறுவனங்கள் போர்டோரிகோவிற்குச் சிறியளவில் வரி
செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் போட்டது. இதனால் போர்டோரிகொவிற்கு வருமானம்
வரும் என்கிற மாயையை உருவாக்கியதால், பாப்புலர் ஜனநாயகக் கட்சி மக்களிடையே
பிரபலமடைந்தது. அதோடுமட்டுமல்லாமல், கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை
முழக்கங்கள் சிலவற்றையும் பயன்படுத்தத் துவங்கியது பாப்புலர் ஜனநாயகக்
கட்சி.
அது
தான் மெக்கர்த்தியிசம் அமெரிக்காவில் பரவியிருந்த காலம். அது
போர்டோரிகோவையும் விட்டுவைக்கவில்லை. 1959 இல் உருவான கியூப புரட்சியின்
தாக்கம் போர்டோரிகோவிலும் எதிரொலித்தது. பாப்புலர் ஜனநாயகக் கட்சி ஏற்கனவே
போர்டோரிகோவின் விடுதலை கோரிக்கையை கைவிட்ட காரணத்தால் அதிலிருந்து
தனியாகப் பிரிந்த போர்டோரிகோவின் விடுதலைக் கட்சியும், போர்டோரிகோ தேசியக் கட்சியும்
அமெரிக்காவிற்கு எதிராகத் தனித்தனியே விடுதலைப் போராட்டங்களை நடத்தின.
குறிப்பாக 1960 களில் விடுதலைப் போராட்டம், இடதுசாரி எண்ணங்கொண்ட
இயக்கங்களால் நடத்தப்பட்டன. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளாலும், அமெரிக்க
இராணுவத்தின் அடக்குமுறைகளைத் தாக்குபிடிக்க முடியாமல் போனதாலும்
போர்டோரிகோவின் விடுதலைக்கட்சி சுவடில்லாமல் போனது. 1971 இல் உருவான போர்டோரிகோ சோசலிசக் கட்சிக்கும்
பின்னாளில் இதேநிலைதான். இவ்வாறாகக் கடந்த 115 ஆண்டகளாக புதிய கட்சிகள்
உருவாவதும் மக்களின் அபிமானத்தை ஓரளவிற்குப் பெறுவதும், பின்னர்
அடக்குமுறைகளால் அவைகள் காணாமல் போவதும் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதற்குப்பின்னால் அமெரிக்க வல்லரசும், இராணுவமும்,
அமெரிக்கப்பெருநிறுவனங்களுமே காரணமாக இருந்துவந்திருக்கின்றன என்பதைச்
சொல்லித்தெரியவேண்டியதில்லை.
[ref]http://en.wikipedia.org/wiki/History_of_puerto_rico[/ref]
விடுதலைப் போராளிகளை அமெரிக்கா அழித்த விதம்:
சிறைக்குள் தள்ளப்படும் போராளிகள் : [ref]http://boricuahumanrights.org[/ref]
மேலும்
போர்டோரிகோவில் விடுதலை வேண்டிப் போராடுகிற ஒவ்வொரு போராளியும் அமெரிக்க
சிறைகளுக்குள் தள்ளப்பட்டு, எஞ்சிய வாழ்நாளை சிறைக்கம்பிகளுக்குள் கழிக்க
நிர்பந்திக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு போர்டோரிகோ
விடுதலைப் போராளி ஆஸ்கார் லோபஸ் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து
வருகிறார். உலகிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் வசிக்கும் அரசியல் கைதி
இவர்தான்.[ref]https://www.goodreads.com/book/show/13592672-between-torture-and-resistance[/ref]
1980களில் போர்டோரிகோவில் ஆட்சி செய்கிற அமெரிக்க அரசை வீழ்த்திவிடக்
கூடும் என்று ஆஸ்கர் லோபஸ் உள்ளிட்ட 12 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தது
அமெரிக்க அரசு. ஆஸ்கர் லோபஸ் தவிர மற்ற அனைவரும் 1999 இல் கிளிண்டன்
ஆட்சிக் காலத்தில் (செய்யாத குற்றங்களுக்கு) பொதுமன்னிப்பு
வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஆஸ்கர் லோபஸ் இன்றும்
அமெரிக்கச் சிறையில் தான் இருக்கிறார். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் எனச்
சர்வசாதாரணமாக தண்டனை விதிக்கப்பட்டுத் தங்கள் வாழ்நாளையே இன்றளவும்
சிறைக்கம்பிகளுக்குள் கழிக்கின்றனர் ஏராளமான விடுதலைப் போராளிகள். இதில்
ஏராளமான பெண் போராளிகளும் அடக்கம்.
போர்டோரிகோ போராளிகள் | வழங்கப்பட்ட தண்டனை ஆண்டுகள் | சிறையில் இருந்த ஆண்டுகள் |
ஆஸ்கர் லோபஸ் ரிவேரா [ref]http://en.wikipedia.org/wiki/Oscar_L%C3%B3pez_Rivera[/ref] | 55 | 32 |
கார்லோஸ் அல்பர்டோ [ref]http://en.wikipedia.org/wiki/Carlos_Alberto_Torres_%28Puerto_Rican_Nationalist%29[/ref] | 78 | 30 |
ரபேல் கேன்சல் மிரண்டா [ref]en.wikipedia.org/wiki/Rafael_Cancel_Miranda[/ref] | 85 | 29 |
ஆஸ்கர் கொலாசோ | 30 | 29 |
கிரிசெலியோ டொரசொலா | 30 | 27 |
அல்பிசு கேம்பஸ் [ref]http://en.wikipedia.org/wiki/Pedro_Albizu_Campos[/ref] | 26 | |
லொலிடா லேப்ரோன் | 50 | 25 |
எட்வின் கோர்டஸ் | 35 | 19 |
எலிசம் எஸ்கோபார் | 68 | 19 |
ரிகார்டோ ஜிமெனெஸ் | 90 | 19 |
அடோல்போ மடோஸ் | 70 | 19 |
டில்சியா நோமி பகன் | 55 | 19 |
அலிசியா | 55 | 19 |
இடா லுஸ் | 75 | 19 |
லூயிஸ் ரோசா | 75 | 19 |
கார்மென் வேலண்டின் | 90 | 19 |
யுவான் என்ரிக் | 55 | 19 |
பிளான்கா | 90 | 17 |
அல்பர்டோ ரோட்ரிக்ஸ் | 35 | 16 |
டோரஸ் | 35 | 16 |
ஒல்கா விஸ்கல் | 8 | 7 |
ஃபிரான்சிஸ்கோ | 10 | 3 |
கார்லோஸ் வேலஸ் | 10 | 3 |
விடல் சான்டியாகோ | 17 | 2 |
யுவான் அந்தோனியோ | 10 | 1 |
மத்திய
கிழக்காசிய நாடுகளில் விடுதலை பெற்று தரப்போகிறோம் என்று சொல்லி
அங்கெல்லாம் அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் உலகறியும். அதே வேளையில், 100
ஆண்டுகளுக்கும் மேலாக போர்டோரிகோ என்கிற நாட்டினை காலானியாக பிடித்து
வைத்திருக்கிற உண்மையினை உலகிற்குச் சொல்லாமல் விட்டது தற்செயலான ஒன்றல்ல.
விடுதலையும் வழங்காமல், அப்பகுதியினை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகவும்
அறிவிக்காமல், தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருக்கிறது அமெரிக்கா. இதற்கு
ஐ.நா. சபை உள்ளிட்ட எவரும் எதிர்ப்பாக இருக்கவில்லை. இந்த 100 ஆண்டுகளில்,
போர்டோரிக்கோவில் எண்ணற்ற கொலைகள், சிறைவைப்புகள், சுரண்டல்களை நேரடியாகவே
நிகழ்த்திவந்திருக்கிறது அமெரிக்கா. இதற்காக அவர்கள் எந்த சர்வதேச
அமைப்புகளிடமும் பதில் சொல்லியதில்லை.
1. போர்டோரிக்கோவின் ஆட்சியினை அம்மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.2. அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தலையிடக்கூடாது.3. அமெரிக்க மற்றும் போர்டோரிகோ சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.4. 100 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா நடத்திவந்த காலனிய ஆட்சியால் அவர்கள் இழந்தவற்றை ஈடுசெய்ய, பெரும்தொகையினை நட்டயீடாக அளிக்கவேண்டும்.5. போர்டோரிக்கோ மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை அமெரிக்க அரசு கோர வேண்டும்.
உலக
குடிமக்களாகிய நம் அனைவரின் கோரிக்கைகளான இவற்றை நிறைவேற்றிவிட்டு, அதன்
பின்னர் மற்ற நாடுகளின் ஜனநாயகம் குறித்தும் மனிதநேயம் குறித்தும் வாய்
திறக்கட்டும் அமெரிக்கா.
(முற்றும்)
இக்கட்டுரைத்தொடர் எழுத உதவியவை:
1. Book: “Between Torture and Resistance” by Oscar Lopez Rivera
2. Book: “Puerto Rico, independence is a necessity” by Rafael Cancel Miranda
3. Book: “Free Puerto Rico” by Pedro Albizu Campos
தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)
தொடரின் இரண்டாவது பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)
தொடரின் மூன்றாவது பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)
No comments:
Post a Comment