அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)
அமெரிக்க அரசு போர்டோரிகோவின்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள்
போர்டோரிகோவின் பொருளாதாரத்தைக் கைப்பற்றின. அமெரிக்கத்
தொண்டுநிறுவனங்களும் மிசினரிகளும் போர்டோரிகோவின் மொழியையும்,
கலாச்சாரத்தையும் ஊடுருவி அழித்தன. கல்வி ஆங்கிலமயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் ஆங்கிலத்தையே கற்பிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
போர்டோரிகோவின் நிலங்கள் யாவும் அமெரிக்காவின் தேவைக்கேற்ப விவசாயம்
செய்யப்பட்டது. உள்நாட்டு மக்களின் உணவிற்கான விளைபொருட்கள் எவையும்
உற்பத்தி செய்யப்படவில்லை. சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு
மிகக்குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏனைய உணவுப்பொருட்கள்
யாவும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டுப் பஞ்சத்தில் வாழ வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
போர்டோரிகோ தேசியக் கட்சியின் உதயம்:
1929 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும்
பஞ்சம் போர்டோரிகோவை வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவாக, போர்டோரிகோவில்
எதிர்ப்பியங்களும் உருவாகின. பெட்ரோ அல்பிசு கேம்பஸ் தலைமையிலான போர்டோரிகோ
தேசியக்கட்சியின் சார்பாக, புதிய விடுதலை இயக்கம் துவங்கப்பட்டது.
“போர்டோரிகோவில் அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிக்கம், சமூக விரோதமானது”
என்று வெளிப்படையாக விமர்சித்தது
தேசியக்கட்சி. அமெரிக்கா நியமித்த அதிகாரிகளையும், நீதிமன்றங்களையும்
நிராகரித்து போர்டோரிகோவின் விடுதலைக்குச் சர்வதேச ஆதரவையும்,
தலையீட்டையும் கோரியது. தங்களது நாட்டினை ஆக்கிரமித்திருக்கிற அமெரிக்காவை
எதிர்த்து ஆயுதம் ஏந்தவும் போர்டோரிகோ மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று
முழங்கியது தேசியக் கட்சி.
1934 இல் ஆயிரக்கணக்கான நிலமற்ற
விவசாயிகள் தாங்கள் அடிமைக்கூலிகளாக வேலை பார்த்து வந்த கரும்பு
விளைநிலங்களில் இருந்து வெளியேறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர் .
விவசாயிகளின் போராட்டம் வெகுவேகமாகப் பரவியது . தேசியக்கட்சியின் தலைவரான
பெட்ரோ அல்பிசு கேம்பசை இப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்குமாறு அழைப்பு
விடுத்தனர். தேசியக்கட்சியினர் இணைந்ததும், போராட்டம் பெரிய அளவில்
வெடித்தது. போர்டோரிகோ காவல்துறையினரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர
முடியாமல் போனது. அமெரிக்கப் பெருநிறுவனங்கள் முற்றிலும் இயங்கமுடியாமல்
தவித்தன. அமெரிக்க எப்.பி.ஐ இன் குழுக்கள் மறைமுகமாக ஊடுருவி, விடுதலைப்
போராட்டத்தை நசுக்க முயற்சி செய்தன. காவல்துறையினர்
இராணுவமயமாக்கப்பட்டனர். எண்ணற்ற கொலைகள் செய்யப்பட்டன. பெட்ரோ அல்பிசு
கேம்பசை கொலை செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
“விடுதலைப் போராட்ட தேசியக் கட்சியினரைக் கொன்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளைக் கொல்ல வேண்டிவரும்”
என்று பெட்ரோ அல்பிசு கேம்பஸ் எச்சரிக்கை
விடுத்தார். 1935 அக்டோபரில், மூன்று முக்கிய விடுதலைப் போராட்ட
இயக்கத்தினர், காவல்துறையால் கொல்லப்பட்டனர். பதிலுக்கு அமெரிக்கக் கர்னல்
பிரான்செஸ்சை கொன்றனர் விடுதலைப் போராட்டத்தினர். இக்கொலையைச் செய்த இரு
இளைஞர்களைக் கைது செய்து காவல்துறை தலைமையகத்தில் வைத்து விசாரணையின்றிக்
கொன்றது அமெரிக்க ஆதரவு காவல்துறை.
1936 ஜூலையில் பெட்ரோ அல்பிசு கேம்பஸ்
கைது செய்து 10 ஆண்டுகள் தண்டனை விதித்து அமெரிக்கப் பெடரல் சிறைக்கு
அனுப்பியது அமெரிக்க அரசு.
பொன்ஸ் படுகொலை:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி அடிமை
ஒழிப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர் போர்டோரிகோ மக்கள். அதன் படி 1937
மார்ச் 21 இல், பொன்ஸ் நகரில் அமைதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முறையாகக் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றே அதனை நடத்தினர். ஊர்வலம்
துவங்குவதற்கு முன்னர், அனுமதி மறுக்கப்பட்டதாக அறிவித்தது காவல்துறை.
இருப்பினும் இளைஞர்களும், பெண்களும் வெள்ளை உடையில் பயமரியாதவர்களாக
அமைதியான முறையில் ஊர்வலத்தைத் துவங்கினர். அவர்களுக்கு முன்னால்
ஆயிரக்கணக்கான காவல்துறையினர், ஆயுதமின்றி நிற்கும் அப்பாவி மக்களின் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தினர். அம்மக்கள் சரணடைந்தும் அவர்களைச் சரமாரியாக
சுட்டுக் கொன்றனர். 22 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 100 பேர் இரத்த
வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
“வெள்ளை உடையில் சென்ற என் அம்மா, சிவப்பு உடையில்தான் திரும்பி வந்தார்”
என்று சிறுவனாக இருந்த மிராண்டா தனது
டைரிக்குறிப்பில் பின்னாளில் இச்சம்பவம் குறித்து எழுதினர். (மிராண்டா
பின்னாளில் முக்கியத் தலைவராகி, போர்டோரிகோவின் சுதந்திரத்திற்காகப்
போராடி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கச் சிறையில் இருந்தவர்)
கடுமையான காயங்களோடு உயிரிழக்கும் தருவாயில் தன்னுடைய உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த இரத்தத்தால்,
“குடியரசு வெல்லட்டும்…. கொலைகாரர்கள் வீழட்டும்”
என்று எழுதி முடித்ததும் உயிரிழந்தான்.
இறந்தவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்விற்கு,
பொன்ஸ் நகரில் மட்டும் 15000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இத்துப்பாக்கிச் சூட்டினை ஆணையிட்டு நடத்திய அமெரிக்கா நியமித்த
போர்டோரிகோவின் கவர்னர் வின்ஷிப்பைத் திரும்பப்பெற மறுத்துவிட்டார்
அப்போதைய அமெரிக்க அதிபர் ரூசுவெல்ட். 1938 இல், தன்னுடைய இராணுவ பலத்தைக்
காட்டி மக்களைப் பயமுறுத்த, மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தினான் அதே
கவர்னர் வின்ஷிப்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்,
போர்டோரிகொவின் கிழக்குப் பகுதியில் உலகிலேயே மிகப்பெரிய கடற்படைத்தளம்
அமைக்கும் முடிவெடுத்தார் அமெரிக்க அதிபர் ரூசுவெல்ட். இதனை போர்டோரிகோ
தேசியவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்த்தவர்கள் சிறைக்குள்
தள்ளப்பட்டனர்; கடும் தண்டனைக்குள்ளாகினர்; ஆனாலும் ஆட்சியாளர்கள் போடுகிற
எல்லாச் சட்டங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிற
எதிர்ப்புணர்வுப் பாடத்தினைப் பிற்கால சந்ததியினருக்குக் கற்றுக்கொடுத்தது
இந்நிகழ்வு.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால்
அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வல்லரசாக உருவாகத் துவங்கியது. இனி வரும்
நூற்றாண்டு அமெரிக்கர்களின் நூற்றாண்டு என்று அமெரிக்க ஆட்சியாளர்கள்
திமிரோடு முழங்கினர். போர்டோரிகோவின் விவசாயிகள் அமெரிக்கப்
பெருமுதலாளிகளோடு போட்டி போட முடியாமல் தங்களது நிலங்களிலிருந்து வெளியேறத்
துவங்கினர். நிலங்களை இழந்தனர். அவர்களின் துயர் ஒருபுறம் இருக்க உலகின்
மற்றனைத்து நாடுகளிலும் காலனியாதிக்கத்தை எதிர்த்து அப்பகுதி மக்களெல்லாம்
போராடிக் கொண்டிருந்த காலகட்டமது. 1949 இல் மாவோ இன் தலைமையில் மிகப்பெரிய
வெற்றியினை ஈட்டியிருந்தது சீன புரட்சிகர அமைப்பு. அப்போது தான் இரண்டாம்
உலகப்போருக்கு அமெரிக்காவுக்கு உதவிய போர்டோரிகோவின் இராணுவ வீரர்கள்
அனைவரும் போர் முடிந்து தங்களது நாடு திரும்பினர். அவர்கள் திரும்பி வந்து
பார்க்கையில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எதுவும் அங்கு உருவாக்கப்பட்டு
இருக்கவில்லை. அமெரிக்காவின் பிடி மேலும் மேலும் போர்டோரிகோவை ஆக்கிரமித்து
வைத்திருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது .
1947 இல் அல்பிசு கேம்பஸ் அமெரிக்கச்
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு போர்டோரிகோவிற்கு திரும்பினார். அவர்
திரும்பிய பின்னர் விடுதலை போராட்ட இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில்
இறங்கினார். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அமெரிக்காவை
எதிர்த்து விடுதலை கேட்பதே சட்டவிரோதமானது என்கிற சட்டத்தினை அமெரிக்க அரசு
நிறைவேற்றியது. அந்தச் சட்டத்திற்குப் பெயர் little smith act.
அச்சட்டத்தைப் பயன்படுத்தி போர்டோரிகோ தேசிய கட்சியினரை கடுமையாகத்
துன்புறுத்தியது அமெரிக்கஅரசு. அல்பிசு கேம்பஸ் ஐ எப்போதும் போலீஸ்
கண்காணிப்பில் வைத்திருந்தது. அவர் எங்குச் சென்றாலும் காவல்துறையினர்
அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் மளிகைக்கடைக்குச் சென்றால் கூட
காவல்துறையினர் அங்கும் சென்று கடை விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
1948 ஆம் ஆண்டுத் தேசியக் கட்சியினர், அமெரிக்கா நடத்தும் கண்துடைப்புத்
தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
(தொடரும்….)
– இ.பா.சிந்தன்
– தீபா சிந்தன்
No comments:
Post a Comment